தேசிய அளவில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் 'ஞானோத்ஸவம் 2020' நிகழ்ச்சி திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று (பிப். 20) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுந்தரராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ரோஹித் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "உலக அளவில் பெரிய நாடுகளின் பட்டியலில் 7ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் மூலம் உலகளாவிய உயர்கல்வி முறையை இந்தியா கொண்டிருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்கள் வசதிக்கேற்ப காலனி ஆதிக்க கல்வி முறையை கொண்டுவந்தனர். சுதந்திரத்திற்குப் பின் படிப்படியாக உயர் கல்வியில் இந்தியா சிறந்து விளங்கி வந்தது. 993 பல்கலைக்கழகங்கள், 39 ஆயிரத்து 31 கல்லூரிகள் உள்ளன. உயர்கல்வியில் 49.3 சதவீதமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில் 70 கோடி பேர் இளைஞர்கள். இளைய சமுதாயம் சிறந்த உயர்கல்வியை பெற்று நாட்டை 21ஆம் நூற்றாண்டை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய கடமை உள்ளது" என்றார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடர்ந்து பேசுகையில், மொழி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். தாய்மொழியில் கல்வி கற்பது சிறந்தது. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கல்லூரியும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும். எதிர்கால இந்தியாவிற்கு ஏற்ப மாணவர்களை நாம் தயார்படுத்த வேண்டும். மனித நேயம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத மதம், கொள்கை இல்லாத அரசியல் இருக்க முடியாது. மதம் சார்ந்த மனம் அனைவருக்கும் இருக்க வேண்டும். அன்றாடம் நாம் தூங்கி எழுவது என்பது ஒரு புதிய பிறப்பாகும். அதனால், புதிய பிறப்பை வழங்கிய அவரவர் மத கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். எளிமையான வாழ்க்கையையும், வரையறை கொண்ட தேவையையும் நாம் பின்பற்ற வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து சென்றார். அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது ஒரு பெட்டியில் புத்தகங்களும், ஒரு பெட்டியில் ஆடைகளுடன்தான் ராஜ்பவன் வந்தார். பதவிக்காலம் முடிந்து செல்லும்போதும் அதே இரண்டு பெட்டிகளோடுதான் வெளியில் சென்றார். எளிமையான வாழ்க்கை முறைக்கு அவரையே நாம் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அதிகளவில் நிதி வசூலித்த மாவட்ட ஆட்சியருக்கு கோப்பை வழங்கிய ஆளுநர்!