பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் - மருத்துவ காப்பீடு
திருச்சி: அனைத்து அரசு பணியாளர்களையும் ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பிச்சைமுத்து, துணைத் தலைவர் ராஜா, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் நாராயணன், லியோ, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட இணைச் செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
அரசு பணிகளில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கரோனா பாதிக்கும் பணியாளர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும். அவர்களுக்கு தேவைக்கேற்ப பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து துறை பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறையற்ற ஆய்வுகளை ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் மதுபான சரக்கு இருப்பு குறைவிற்கு 2 சதவீத அபராதம் வசூலித்த பின்னரும் 50% அபராதம் செலுத்தச் சொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.