திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை சிபிஐ விசாரித்த நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் தற்பொழுது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையை SIT எஸ்பி ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி மதன்குமார் கொண்ட குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமான 13 பேர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையானது நவ.1,14, மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும், இந்த சோதனை நடைபெறும் போது தங்கள் தரப்பு வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் இருக்க வேண்டுமென நீதிபதியிடம் கூறினர்.
இதனைத்தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர் ஆகிய 6 (ரவுடிகள்) நபர்கள் இன்று(நவ.18) திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்ய வந்தனர். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆறு நபர்களிடம் ரத்தம், சிறுநீர், இசிஜி உள்ளிட்டப் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.