திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே அக்கியம்பட்டி, லிங்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையே வனத்துறைக்கு சொந்தமான வேலமலை பீட்டில் கெளம்பாரகுட்டு எனும் சிறு மலைக்குன்று உள்ளது. இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
கெளம்பாரகுட்டு மலைக்குன்றில் தீ விபத்து - மூலிகைகள் நாசம்! - மலைக்குன்று
திருச்சி: மணப்பாறை அருகே கெளம்பாரகுட்டு மலைக்குன்றில் ஏற்பட்ட காட்டுத் தீயால், ஒன்றரை ஏக்கர் பரப்பளவிற்கு மூலிகைச் செடிகள், சிறு மரங்கள் தீக்கிரையாகின.
வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தினால் வனப்பகுதியில் ஒன்றரை ஹெக்டர் பரப்பளவிற்கு பல்வேறு வகையான மூலிகைச் செடிகொடிகள், சிறு மரங்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து மருங்காபுரி வனச்சரக அலுவலர்கள், துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.