தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராடினர். எலும்புக்கூடுகளுடன் அரைநிர்வாணமாக மேல்சட்டை அணியாமல் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது அய்யாக்கண்ணு கூறுகையில், ”1982-ஆம் வருடம் காவிரி ஆற்று தண்ணீர் தொடர்பாக சென்னை மாகாணம் மற்றும் மைசூர் மாகாணத்திற்கு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி காவிரியிலோ, தென் பெண்ணை ஆற்றிலோ எந்த இடத்திலும் அணை கட்ட கூடாது என்றும், காவிரி மூலம் கர்நாடகா அரசு 90,000 ஏக்கர் சாகுபடி செய்துகொள்ளலாம். மீதி காவிரியில் வரும் 1000 டிஎம்சி தண்ணீரையும் தமிழ்நாடு பயன்படுத்தி கொள்ளலாம் என்று இருந்தது.
அதனால், அப்பொழுது தமிழ்நாட்டில் 30 லட்சம் ஏக்கர் நிலம் சில இடங்களில் மூன்று போகம், சில இடங்களில் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், இன்று கர்நாடகா காவிரி நீரின் மூலமாக 30 லட்சம் ஏக்கர் மூன்று போகம் சாகுபடி செய்கிறது. தமிழ்நாட்டில் 15 லட்சம் ஏக்கரில் ஒரு போகம் சாகுபடி நடைபெறுகிறது.
கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டிவிட்டால், 1982-ஆம் ஆண்டு கர்நாடகா காவிரி தண்ணீர் மூலமாக 90,000 ஏக்கர் சாகுபடி செய்தது போல, தமிழ்நாட்டில் 90,000 ஏக்கர்தான் சாகுபடி செய்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.