திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் கொம்பன் என்கின்ற ஜெகன் (வயது 30). திருச்சியில் பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே 19ஆம் தேதி அன்று ஜெகன் தனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக, அவரது வீட்டில் கூட்டாளிகளுக்குக் கறி விருந்து ஏற்பாடு செய்து உள்ளார். அதில் அவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டாக் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்டனர். இந்த தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று (நவ. 22) திருச்சி மாவட்டம் சமயபுரம் - மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கின்ற ஜெகனை பிடிக்க முயன்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. போலீசாரை தாக்கி விட்டுத் தப்பிக்க முயன்ற போது ரவுடி ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை ரவுடி தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவர் இடது கையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரவுடி ஜெகனின் உடல் லால்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரவுடி கொம்பன் ஜெகன் மீது பல்வேறு கொலை முயற்சி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பதவி ஏற்ற நாளில் இருந்து திருச்சி மாவட்ட புறநகர் பகுதியில், சட்ட விரோதமாக நடைபெறும் பல்வேறு சம்பவங்களை அதிரடியாக சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது , நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் என பொது மக்கள் அடையாளம் கண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து! மன்சூர் அலிகானுக்கு சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு!