திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம்பட்டி விஜிபி பிளாட் பகுதியில் வசித்து வருபவர் மேரி (75). இவரது கணவர் இருபது வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன் பின் மேரி தனது மகள்களான ஜெயந்தி (43), ஜெசிந்தா (40) உடன் வசித்து வந்துள்ளார். மகள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், மேரி உயிரிழந்துள்ளார். அவரது உடலை வீட்டிற்குள்ளேயே வைத்து மீண்டு வருவார் என மகள் இருவரும் ஜெபம் செய்து வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் மணப்பாறை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவலர்கள் மேரியின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவரது மகள்களிடம் கூறினர்.
ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து தங்களது தாய் இறக்கவில்லையென்றும் காவலர்கள் அங்கிருந்து போகுமாறு கூறி அவர்களை வசைபாடினர். இருப்பினும் காவல்துறையினர் அவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.