திருச்சியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை திருச்சி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப் 12) சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குக்கு தொடர்புடைய சோதனை எனவும் அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நான்கு முறை சோதனை செய்தது.
அவரின் வீடு, சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு, தொழில் சம்பந்தமான இடங்கள் ஆகிய இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் புதிதாக வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் எல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க:Seeman : நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் சீமான் ஆஜராகாதது ஏன்? - சீமான் தரப்பு விளக்கம்!
இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அமலாக்கத்துறை மீண்டும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையானது யார் யார் வீடுகளில் நடத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை சோதனை முடிவில் அமலாக்கத்துறை அறிக்கையில் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.
தற்போது நடத்தப்படும் சோதனைகளின் அடிப்படையில் அங்கு கிடைக்கப் பெறும் ஆவணங்களை வைத்து மேலும் சில இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளன்ர்.
அமலாக்கத் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய 5 துணை ராணுவத்தினருடன் இரண்டு கார்களில் வந்து மணல் குவாரி மற்றும் மணல் கொட்டி வைத்து விற்பனை செய்யப்படும் இடத்திலும் சோதனை செய்து வருகின்றனர். மேலும் முன்னதாக ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதற்குள் அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"குடிமராமத்து பணி.. அப்படினா ஈபிஎஸ்க்கு என்னனே தெரியாதே!" - அமைச்சர் துரைமுருகன்!