திருச்சி:திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரியின் கிளைகள் செயல்பட்டு வந்தது. இக்கடையில் பலரும் முதலீடு செய்த நிலையில், தற்போது பிரணவ் ஜுவல்லர்ஸ் கடையை மூடி விட்டு மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரால், நேற்று (அக்.19) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நகைக்கடைக்கு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிபிடதக்கது. 0 சதவீதம் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்துள்ளனர். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 சதவீத வட்டி வீதம் என மாதம்தோறும் 10,000 ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்ததாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, திருச்சி கடை தவிர மற்ற பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள், திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் கடையை இரண்டு நாட்களுக்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.