திருச்சி:கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று (நவ. 26) மாலை சரியாக 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
900 லிட்டர் எண்ணெய், 300 கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக் கொண்டு ஏற்றப்பட்ட இந்த மகா தீபத்தைக் கண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஓம் நமச்சிவாய என்று முழக்கமிட்டவாறு சாமி தரிசனம் செய்தனர். தென்கயிலாயம் என போற்றப்படுவதும், சைவ தலங்களுள் ஈடு இணையற்றதாகவும் சிறப்பு பெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளி உள்ளார்.
ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் தாய்வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த ஸ்தலம் என்பதால் இந்த தலத்தில் சிவன் தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார். சுமார் மூவாயிரத்து ஐநூறு பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த மலைக்கோட்டையில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் என்றழைக்கப்படும் விநாயகர் கோயிலும், மலை நடுவே தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழே மாணிக்க விநாயகரும் எழுந்தருளி காட்சி அளிக்கின்றனர்.
அத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியில் இருந்து மாலை 5.30 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு, தாயுமானவர், மட்டுவார் குழலம்மை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி காட்சியளிக்கப்பட்டது.