தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனல் பறக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்; திருச்சியில் திரளும் திமுகவினர் - பாராளுமன்ற தேர்தல் பணிகள்

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இதன் ஒருபகுதியாக திருச்சியில் திரளும் திமுகவினரிடையே அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதுகுறித்து விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு...

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 25, 2023, 6:37 PM IST

திருச்சி: நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவும் இந்த தேர்தலை கடும் சவால்களுடன் எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றார். இதன் முன்னோட்டமாக நாளை திருச்சிக்கு வரும் முதலமைச்சர், அங்கு 2 நாள்கள் தங்கியிருந்து கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக நாளை காலை (ஜூலை 26) காலை 11 மணி அளவில் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்குப் பயிற்சி பாசறை:சென்னையில் இருந்து விமானம் மூலம் வரும் அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க மாநிலம் முழுவதும் தி.மு.க. 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் முதன்முறையாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. டெல்டா மண்டலமான அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை தெற்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், பயிற்சி பாசறைக்கூட்டம் 26ஆம் தேதி மாலை திருச்சி ராம்ஜிநகர் அருகே நடக்கிறது.

12,000 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்:இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தை மாநாடு போல் பிரமாண்டமாக நடத்த தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார். திருச்சி ராம்ஜிநகர் பரமேஸ்வரி மில் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 12,000 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருவோர் என 30 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. கூட்டத்திற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே 20 ஏக்கர் இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் இன்ஜினியரிங் கல்லூரியில் நாளை மறுநாள் (ஜூலை 27) காலையில் தொடங்கும் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார்.

வேளாண் சங்கமம் 2023:வேளாண் உழவர் நலத்துறை சார்பில் 'வேளாண் சங்கமம் 2023' (Agriculture Sangam 2023) என்ற பெயரில் நடைபெறும் இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநில அளவிலான இந்தக் கண்காட்சியில் 250 உள் அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 17 மாநில அரசுத்துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும் 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பக் கண்காட்சி: பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்கத் திடல்கள், பசுமைக்குடில்கள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்குப் பயன்படும் புதிய தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது.

கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை வேளாண் விளைபொருட்கள், இயற்கை பருத்தி ஆடை, மூலிகைச்சாறு, பானங்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட உள்ளன.

ட்ரோன்கள் பறக்கத் தடை: இந்தக் கண்காட்சியில் இயற்கை வேளாண்மை, புதிய தலைமுறை விவசாயிகளுடன் கலந்துரையாடல், வீட்டுத் தோட்ட செய்முறை விளக்கம், பாரம்பரிய விதைக் கண்காட்சி ஆகியவையும் இடம் பெறுகின்றன. உங்கள் ஊர் மண்ணுக்கு ஏற்ற செடி கொடிகள் எது? தேனில் இருந்து அபரிவிதமான லாபம் பார்ப்பது எப்படி? என்பதற்கான விளக்கங்களும் வேளாண் நிபுணர்களால் அளிக்கப்படுகிறது. ஆகையால், 26-27 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் ட்ரோன் கேமரா பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்

இதையும் படிங்க:கோடநாடு வழக்கிற்காக கரம்கோர்த்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க உதவுமா?

ABOUT THE AUTHOR

...view details