திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது, சோபனபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த, ரஞ்சித் பிரபு. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சோபனபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் கருங்கற்கள் (அரளை கற்கள்) இருந்தன. இவற்றை சேகரித்த ஊராட்சி ஒன்றியத்தினர் எதிரே உள்ள அரசு நிலத்தில் குவித்து வைத்திருந்தனர்.
தற்போது, கட்டுமானப் பணிகள் முழுமை அடைந்து புதிய கட்டடத்தில் சோபனபுரம் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அலுவலகத்துக்கு எதிரே குவிக்கப்பட்டு கிடந்த கருங்கற்கள் நேற்று (ஜுன்.7) காலை திடீரென மாயமாகியது.
தகவலறிந்த, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கவுன்சிலர்கள் சம்பவ இத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சோபனபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், திமுக நிர்வாகியுமான ராமச்சந்திரன், சோபனபுரம் ஊராட்சி 2ஆவது வார்டு கவுன்சிலர் ஆபிதா பானுவின் கணவர் சவுக்கத் அலி ஆகிய இருவரும் கற்களை அள்ளிச் சென்றது தெரியவந்தது.