தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லணைக்கு நிகராக பேனா நினைவுச் சின்னம் இருக்கும் - திண்டுக்கல் ஐ.லியோனி - karunanidhi pen memorial

கரிகாலன் கட்டிய கல்லணைக்கு நிகராக கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் இருக்கும் என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

கல்லணைக்கு நிகராக பேனா நினைவுச் சின்னம் இருக்கும் - திண்டுக்கல் ஐ.லியோனி
கல்லணைக்கு நிகராக பேனா நினைவுச் சின்னம் இருக்கும் - திண்டுக்கல் ஐ.லியோனி

By

Published : Feb 13, 2023, 12:49 PM IST

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி

திருச்சி:தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க எழுச்சி நாள் விழா, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (பிப்.12) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, “எத்தனையோ தலைவர்கள் பேனாக்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த தலைவருடைய பேனாக்கள், சில சமயங்களில் மக்கள் விரோத கருத்துகளுக்காகக் கையெழுத்துப் போட்டிருக்கிறது. சில பேனாக்கள், மக்களுக்கு எதிரான சிந்தனைகளை எழுதி இருக்கிறது.

ஆனால், என்றைய தினம் இந்த பேனாவால் எழுதத் தொடங்கினாரோ, அன்று முதல் தமிழ் மக்களுக்காகவும், தமிழின் வளர்ச்சிக்காகவும், உண்மையான அறிவியல் பூர்வமான சிந்தனை, பகுத்தறிவு, தன்மானம் ஆகியவற்றிற்காக எழுதப்பட்ட ஒரே பேனா கருணாநிதியின் பேனா மட்டுமே.

அதனால் அந்த சின்னம் கடலில் நிறுவப்படுவது, உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களுக்குத் தமிழ் உணர்வை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய சின்னமாக அமையும். ஏற்கனவே பல நாடுகளில் பல அரசியல் கட்சிகளுக்காக, சிந்தனைகளுக்காக நினைவுச் சின்னங்கள் கடலில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல இந்த தமிழர்களுக்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்த, தன் பேனா முனையால் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிக் காட்டிய கருணாநிதி எழுதிய திரைப்பட வசனங்கள், திரைப்படப் பாடல்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த ஒரே தலைவர்.

அரசியலிலும், இலக்கியத்திலும், சிந்தனைகளிலும் ஒரே நிலையிலிருந்து கடைசி வரை வாழ்ந்து காட்டிய அந்த தலைவருக்கு, கடலில் பேனா சின்னம் நிறுவுவது வருங்கால சமுதாயத்திற்குத் தமிழ் வாழ்வதற்கான மிகப்பெரிய வரலாற்றுச் சின்னமாக அமையும். எப்படி கரிகாலன் கல்லணையைக் கட்டி தமிழரின் பெருமையை நிலைநாட்டினாரோ, அந்த கல்லணைக்கு நிகராக இந்த பேனா சின்னம் இருக்கும்.

எனவே இது ஒட்டுமொத்த தமிழர்களுடைய தன்மானச் சின்னமாக அமைய வேண்டும். அவ்வாறு அமைவதை எந்த தமிழனும் முழுமையாக ஏற்றுக் கொள்வான். தற்போது இதனை விமர்சிப்பவர்கள் ஏதோ சடங்கிற்காகப் பேசுகிறார்களே தவிர, கருணாநிதியின் பேனா எழுத்தில் மிகப்பெரிய ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்கள்தான் அரசியலுக்காகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே பேனா நினைவுச் சின்னம் என்பது தமிழர்களின் தன்மான சின்னம்” என்றார்.

இதையும் படிங்க:‘10,000 அடி உயரத்துக்கு கூட பேனா வைத்துக் கொள்ளட்டும்’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details