செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன் திருச்சி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருச்சியில் நடந்தது. இதில், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் நடந்தது. அவர்களுக்கு எதிரான கொடூரமான சம்பவங்கள் நடந்தது. அதற்கு நரேந்திர மோடி தான் காரணம் என கூறியவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். மோடிக்கும், அமித்ஷாவிற்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள கீழமை நீதிமன்றம் தான் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு தண்டை வழங்கியது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு ஒரு மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருக்கும் நீதிமன்றங்கள் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற சந்தேகத்தை இது எழுப்புகிறது. அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் தொடர்ந்து பேசி வருகிறார். இதில் அரசியலுக்காக பேசி மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.
மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் கர்நாடக அரசிடம் இருந்தால் அதை அவர்கள் கைவிட வேண்டும். அவர்கள் அணை கட்ட முயற்சித்தால் அதை நாங்கள் ஒன்றிணைந்து முறியடிப்போம். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு ராஜபாளையத்தில் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் தோல்வியடைந்த பின்னர் பாஜக ஆட்டம் காண தொடங்கி விட்டது. பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவார்கள் என அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை, அவர்கள் ஒன்றிணைந்து கூட்டம் வெற்றி பெற்ற பின்னர் பாஜகவின் பிதற்றல் தொடங்கி இருக்கிறது. மஹராஷ்டிராவில் சரத்பவார் கட்சியை உடைத்து அஜித்பவார் துணை முதலமைச்சராகவும், அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அவர்கள் பணியை வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள். அஜித் பவாருக்கும், அவருடன் பதிவியேற்ற எட்டு அமைச்சர்களுக்கும் அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. அமலாக்கத்துறை பாஜகவின் கைத்தடியாக மாறி விட்டது. நாடு முழுவதும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி கட்சிகளை உடைக்கும் முயற்சியை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாட்டிலும் அந்த முயற்சியை அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமலாக்கத்துறைக்கு தலைவர் யார் என்றே தெரியவில்லை. அண்ணாமலை தான் அமலாக்கத்துறைக்கு வழிக்காட்டுகிறார். பாஜகவை எதிர்த்தால் அவர்களுக்கு நிச்சயம் சிறை உண்டு என்கிற அடிப்படையில் தான் இன்று அவர்கள் (பாஜக) செயல்படுகிறார்கள்.
பிரச்னைகளை மூடி மறைத்து திசை திருப்பி, கலகம் ஏற்படுத்த பொது சிவில் சட்டம் மூலம் முயற்சிக்கிறார்கள். குஜராத்தில் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக கலகம் செய்து இந்து வாக்கு வங்கிகளை ஒன்றிணைத்தார்கள். அதில் கிடைத்த அனுபவம், வெற்றி ஆகியவற்றை பயன்படுத்தி நாடு முழுவதும் அதை செயல்படுத்த பார்க்கிறார்கள்” என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:திமுகவினர் இழைத்த அநீதியை மாரி செல்வராஜ் 'மாமன்னன்' மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் - அர்ஜூன் சம்பத்