திருச்சி:கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில் (12643), நேற்று (ஜூன் 1) மாலை 5.20 மணிக்கு வழக்கம் போல் சென்னைக்கு புறப்பட்டது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த ரயில், பின்னர் அங்கிருந்துஸ்ரீ புறப்பட்டு சென்றது. பிச்சாண்டார் கோவில் - வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தண்டவாளத்தின் நடுவே 2 பெரிய லாரிகள் டயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றார். அதிவேகத்தில் ரயில் வந்து கொண்டிருந்ததால், டயர்கள் மீது ஏறியது. பின்னர் ரயில் சக்கரத்தில் லாரி டயர்கள் சிக்கி, நடுவழியில் நின்றது. மோதிய வேகத்தில் என்ஜினில் இருந்த குழாய் பழுதடைந்தது. இதனால் ரயிலை இயக்க முடியவில்லை. நள்ளிரவு 1.05 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. பின்னர் பழுது நீக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக 1.45 மணிக்கு ரயில் சென்னை புறப்பட்டு சென்றது. ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 31ஆம் தேதி லால்குடி அருகே மேல வாளாடி ரயில்வே தண்டவாளம் அருகே, பாலத்தின் கீழ் சாலை பணிக்காக ஜேசிபி மூலம் குழி தோண்டி உள்ளனர். அப்போது மணலுக்கு அடியில் இருந்த ரயில்வே டிராக் சிக்னல் கேபிள் பழுதடைந்ததால் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை.