திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ளது அருவாக்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், தங்களின் ஊரைச் சேர்ந்த சக்திவேல், தவசு ஆகியோர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 30 குடும்பத்தினரை கடந்த 30 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், கோயில் திருவிழா, பொங்கல் திருவிழா, விளையாட்டுப் போட்டி, கோலப்போட்டி உட்பட எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு தாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகார் தெரிவிக்க வந்த லதா என்ற பெண் கூறுகையில், “நாங்கள் திருவிழா, பொது நிகழ்ச்சி போன்ற எந்த நல்ல விஷயத்திலும் கலந்துகொள்ள முடியவில்லை. திருவிழா என்றால் அவர்களது வீட்டுக்கெல்லாம் விருந்தினர்கள் வருகிறார்கள். எங்களது வீடுகளுக்கு விருந்தினர்களை அழைக்க முடியாமல் அவமானப்பட்டு நிற்கின்றோம். தொடர்ந்து இதுபோன்று புறக்கணித்தால் நாங்கள் மதம் மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்றார்.