திருச்சி: மணப்பாறை அடுத்த கருப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட செவக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிவேல். அதே ஊரில் செங்கல் சூளை வைத்து நடத்தி வரும் பிச்சை (அதிமுக நிர்வாகி) என்பவர் ஜேசிபி மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தி கருப்பூர் பெரிய குளத்தில் மண் எடுத்து வந்து ஆண்டிவேல் நிலத்தில் கொட்டியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆண்டிவேல் குடும்பத்தினர், இது குறித்து கருப்பூர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் நேரில் அணுகி விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது ஆண்டிவேல் பெயரில் உரிய அனுமதி பெற்றதற்கான ஆதாரத்தை ஊராட்சி மன்றத் தலைவர் காட்டியுள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட அனைவரிடமும் நாங்கள் ஏதும் கருப்பூர் குளத்தில் மண் அள்ளிக் கொள்வது சம்பந்தமாக அனுமதி கேட்கவில்லை என கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ஆண்டிவேல் பெயரில் பிச்சை என்பவருக்கு எப்படி அனுமதி தந்தீர்கள் என்றும், அனுமதி கோரிய விண்ணப்ப பத்திரத்தில் கை நாட்டு வைக்கத் தெரிந்த அவருக்கு ஆண்டிவேல் என்று அவரது கையெழுத்து இடம் பெற்றது எப்படி? என்பதும் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பழனி கோயில் உதவி ஆணையர் தரக்குறைவாக பேசுவதாக மிராஸ் பண்டாரங்கள் புகார்!
இந்த சம்பவம் அறிந்த பிச்சை தரப்பிலான சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆண்டிவேல் பேரன் ராஜேஷ் குமார் (பாஜக) நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 9) மாலை வீட்டிற்கு செல்லும் வழியில் வழிமறித்து தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவ்வழியே சென்ற ராஜேஷ் குமார் நண்பர்களையும் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஆண்டிவேல் தனது பேரன் மீது தாக்குதல் நடத்திய செங்கல் சூளை உரிமையாளர் பிச்சை, அவரது மகன் உள்பட 30 பேர் மீதும், தனது பெயரில் போலி அனுமதி அளித்த மணப்பாறை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மீதும் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரை பெற்றுக் கொண்ட புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் மார்நாடு வழக்குப் பதிவு செய்ய மறுத்து புகார் மனுவை மட்டும் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய மறுத்த புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலி அனுமதி அளித்த மணப்பாறை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நேற்று (ஆகஸ்ட் 10) மாலை மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மெத்தனப்போக்கோடு செயல்பட்டு மண் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், மண்ணை கொள்ளையடிப்பதுதான் திராவிட மாடல் என்றும், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி பேசினார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே அமர்ந்து மணப்பாறை வட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
இதையும் படிங்க:நிர்மலா சீதாராமன் பிரமாண்ட பொய்யை கூறுகிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கு!