முதல்வர் ஸ்டாலின் பேசும்போது மோடி கோஷம் திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.02) திருச்சி வந்திருந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த பிரதமர் மோடியை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரதமர் திருச்சி வருகை தந்ததின் காரணமாக திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக திருச்சி விமான நிலைய வளாகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரான துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்புப் படையினர், கமாண்டோ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுமட்டும் அல்லாது, திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி முதல், விமானம் நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் 5,000 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலலில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த மழைப்பொழிவைக் கடுமையான இயற்கைப் பேரிடர்கள் என அறிவித்து, தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துப் பேசினார்.
இதற்கு முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது அந்த விழாவில் கூடியிருந்த பாஜகவினர் "மோடி..மோடி.." என்று தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பினர். அப்போது பிரதமர் மோடி, மேடையில் இருந்தவாறு அவர்களை அமைதியாக இருக்கும்படி கைகளை அசைத்து சைகைக் காட்டினார். மேலும், தற்போது இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி!