திருச்சி:எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்த்தி என்பவர், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், திருச்சி சண்முகா நகர் 3-வது குறுக்கு சாலையில் உள்ள தனக்கு சொந்தமாக மாண்டேசரி பள்ளியுடன் வீடு இணைந்து உள்ளது. இதனை கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்தும், 6 மாத வாடகையும் தராமல், பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (நவ.16) பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் சூர்யா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகிய இருவரும் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா பேசியதாவது: ”ஆர்த்தியும் அவரது கணவரும் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து குண்டர்களை வைத்து மிரட்டியதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளதாகக் கூறினார். மேலும், தன் மீது கொடுக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்றும் விளக்கமளித்தார்.