திருச்சி:திருச்சி கண்டோன்மென்ட் எஸ்பிஐ காலனி பகுதியில் கடந்த 15 ஆம் தேதி, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அருகே மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த நிலையில், இந்த திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவிற்கு எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, திருச்சி சிவா எம்பியின் வீட்டில் உளளே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து நொறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய பத்துக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க:கார் கண்ணாடி உடைப்பு விவகாரம் - ''தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் நான்'' - திருச்சி சிவா பேட்டி
அப்போது காவல் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் எம்.பி சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர். இந்த தாக்குதலை தடுக்க வந்த பெண் காவலர் மீதும் காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, இந்த தாக்குதலை நடத்திய அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.