அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அங்கனூரில் வாக்களிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, "உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தது. தற்போது, நீதிமன்ற நெருக்கடியின் காரணமாக தேர்தலை நடத்துகிறது. தேர்தல் அலுவலர்களும் காவல் துறையினரும் ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகப் பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது.
தேசத்திற்கு விரோதமான, மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு அதிமுகவும் பாமகவும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுகவும் பாமகவும் ஆதரவளித்ததன் விளைவாகத்தான் அந்தச் சட்டம் நிறைவேறியுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, கலவரம் போன்றவற்றிற்கு அதிமுக, பாமகதான் காரணம்" என்றார்.