திருச்சி: சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டதுன.
பின்னர், கரோனா வைரஸின் தாக்கம் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து அலுவலகங்கள், கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவை படிப்படியாக திறக்கப்பட்டன. இருப்பினும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படாமலேயே இருந்தன.
பின்னர், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பள்ளி, கல்லூரிகளை திறக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டாலும் அவற்றில் நிறைய குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, மாணவர்கள் தேர்வை எதிர் கொள்ளாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும். எனவே பள்ளிகள் திறக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தனர்.
சிலர், தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில் இணைய வசதியுடன் செல்ஃபோன் இருப்பதால் அவர்களால் ஆன்-லைன் வகுப்புகளில் எளிதில் கலந்துகொள்ள முடிந்தது. ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை கேள்வி குறியாகியுள்ளது எனவும் வருத்தம் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் இவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் வருகிற ஜூன் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத எந்தளவுக்கு தயாராகி உள்ளனர். மேலும் மாணவர்களை ஆசிரியர்கள் எந்த அளவுக்கு தயார் படுத்தி உள்ளனர் என்பது குறித்து ஈடிவி செய்தியாளர்கள் களஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திருச்சி விஸ்கவுண்ட்ஸ் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியை நந்தினி," கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பை தொடர்ந்து ஜூலை மாதம் முதல் ஆன்-லைன் மூலம் பாடம் எடுக்க ஆரம்பித்தோம். இதில் 70 சதவீத மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆன்-லைன் பாடத்தில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு பாடங்களை பதிவு செய்தும் அவர்களது தொலைபேசிக்கு அனுப்பினோம்.