திருச்சி:திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (ஜன.2) திருச்சி வருகை தருகிறார். பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வரவேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாஜகவினர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, காந்தி மார்க்கெட் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (Swachh Bharat Mission) தூய்மைப்பணிகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “பிரதமருக்குப் பிடித்த 'தூய்மை இந்தியா' திட்டத்தை திருச்சிக்கு பிரதமர் வரும் நேரத்தில் இன்றைய நாளில் 75 இடங்களில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், தலைவர்கள், இளைஞர் அணி தலைவர் உள்ளிட்டோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகத்தில் குப்பைகள் அதிகளவு சேர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு குப்பைகளை அகற்றி மீண்டும் உரமாக மாற்றி பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். அதிகமான குப்பை கிடங்குகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும், குப்பைகளை அகற்றாமல் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.