திருச்சி காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் மீது இளம்பெண் ஒருவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார் திருச்சி: காவல் ஆய்வாளர் மீது பெண் பாலியல் புகார் அளித்துள்ளது திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமார் மீது பாலியல் தொந்தரவு அளித்ததாக இளம்பெண் ஒருவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 5) மனு அளித்துள்ளார்.
எதார்த்தமாக புகார் ஒன்று கொடுப்பதற்காக காவல் நிலையம் சென்றதிலிருந்து தொடர்ந்து தனக்கு பாலியல் ரீதியாக புகார் அளித்து வருவதாக குற்றச்சாட்டியுள்ளார். சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் கிரிஜா, திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், புகார் ஒன்றின் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்றதாகவும், அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, தன்னை சிலர் மிரட்டுவதாகவும் வருந்தியுள்ளார். ஆகவே, தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்த பின்னர், தன்னிடம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமாரன் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொள்வதாகவும், எப்போது வருகிறாய், எனக்கு அரசியல் பின்புலம் உள்ளது; உன்னை நான் எப்படியும் என் வலையில் விழ வைக்க முடியும் என்றும் மிரட்டுவதாக கண்ணீர் மல்க கூறினார். தொடர்ந்து, ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை என் செல்போனுக்கு அனுப்பி, தனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் விசாரணைக்கு அழைத்த காவல்துறையினர் விசாரணை செய்து விட்டு அனுப்பியதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு கேட்ட போது, தன் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாகவும், அப்பெண்தான் தன்னிடம் தவறாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தன்னிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் இளம்பெண் கொடுத்த பாலியல் சீண்டலின் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிபடுத்தினர்.
இதையும் படிங்க:மகளின் பிறந்தநாளில் காதலனை கொலை செய்த தந்தை.. கோவையில் நடந்தது என்ன?