காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு திருச்சி:திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் ஒன்றிய அரசின் காசநோய் தடுப்புத் திட்டத்தினை செயல்படுத்திடும் ''ரீச்'' என்ற தொண்டு நிறுவனமும் காசநோய் தடுப்புத்துறையும் இணைந்து இந்தியா முழுவதும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஒரு வட்டமேசை கருத்தரங்குகளை உருவாக்கி, அதன் மூலம் காசநோயை குறைப்பதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி காசநோய் பிரிவு மருத்துவப் பணிகள் இணைஇயக்குநர் சாவித்திரி கலந்து கொண்டு பேசுகையில், ''காசநோய் என்பது காற்றில் பரவும் ஒரு தொற்று நோய்க் கிருமி தான். மேலும், அது மனிதனுடைய உடம்பிற்குள் சென்று தங்கிவிடும். மனிதனின் ஊட்டச்சத்து, சர்க்கரை நோய், எச்ஐவி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும்போது, காசநோய் கிருமி தூண்டப்பட்டு அது காசநோயாக மாறும். ஒரு மனிதனுக்குள் 2 வாரத்திலோ அல்லது 2 வருடத்திலோ பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்த காசநோய் என்பது ஓரிரு நாட்களில் வந்த நோய்த்தொற்று அல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய நாட்டில் உள்ள மம்மிக்களை ஆய்வு செய்தபோது, அவர்களின் உடம்பிலும் காசநோய் கிருமிகள் இருந்ததாக கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் காசநோயினால் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது. நம்முடைய நாட்டில் காசநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். இன்றைய புள்ளி விவரப்படி இந்தியா முழுவதும் மொத்தம் 26 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற 2030ஆம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2025ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தமிழ்நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
அதிகளவில் நுரையில் பாதிப்பு ஏற்பட்டவர்களால் தான் இந்த காச நோய்ப் பரவும். எனவே, தமிழக அரசு சார்பில் மொபைல் எக்ஸ்ரே வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம் இதுவரை 10ஆயிரம் பேருக்கு நேரடியாகச் சென்று பரிசோதனை செய்ததில் 60 பேருக்கு காச நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 வாரத்திற்கு மேல் இருமல், காய்ச்சல், எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்
டாக்டர் கேவிதன் பேசுகையில், ''இந்த காசநோய்க்கு 4 விதமான மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அந்த மாத்திரைகள் அனைத்தும் ஒரு காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் எடைக்கு தகுந்தார்போல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரைகள் காசநோயின் வீரியத்திற்கு தகுந்தார்போல் அவர்களுக்கு எண்ணிக்கை
அதிகப்படுத்தப்படும். இந்த மாத்திரைகள் எடுத்துக்கொண்ட 2 வாரம் முதல் 7 மாதங்களுக்குள் காசநோயின் கிருமிகள் முற்றிலும் அதற்றப்படும். இந்த மாத்திரைகள் அனைத்தும் ஒன்றிய, மாநில அரசுகளால் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார்.
இதையும் படிங்க:சென்னை மாநகர க்ரைம் செய்திகள் : கார் மோதி ஒருவர் பலி, திமுக நிர்வாகி வீட்டில் ஜிஎஸ்டி அலுவலர்கள் சோதனை