திருச்சி டி.இ.எல்.சி. ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆல்பர்ட் இன்பராஜ், துணைத் தலைவர் சாமுவேல் ஆபிரகாம் உள்ளிட்ட நிர்வாகிகள் இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி.) கட்டுப்பாட்டின்கீழ் நான்கு மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட ஆலயங்கள், 185 அரசு உதவிபெறும் பள்ளிகள், தொழிற்கல்வி கூடம், ஆசிரியர் பயிற்சி பள்ளி, முதியோர் காப்பகம் என பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த திருச்சபை பேராயராக டேனியல் ஜெயராஜ் என்பவர் உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் இந்தப் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிட வேண்டும். இந்நிலையில் தனக்கு பதவி நீட்டிப்பு அளிக்கும் வகையில் பொதுக்குழுக் கூட்டத்தை பேராயர் கூட்ட முயற்சித்தார்.
இதற்கு சங்க நிர்வாகிகள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தற்போது கரோனா காலகட்டம் என்பதால் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி நவம்பர் 10ஆம் தேதி திருச்சியில் பேராயர் டேனியல் ஜெயராஜ் பொதுக்குழுவைக் கூட்டி உள்ளார்.