திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர், இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், லால்குடியில் தனது மனைவி பிரேமா உடன் வசித்து வருகிறார். மேலும், சித்தப்பா குஞ்சிதபாதம் கோயம்புத்தூரில் தனது மனைவி சரோஜா உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று (ஜூலை 7) லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் பெரியப்பா மாணிக்கம் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்தப் புகார் மனுவில், ''எங்களுக்கே தெரியாமல் எங்கள் அண்ணன் சிவக்கொழுந்து 1990ல் எங்கள் சொத்தை ஏமாற்றி விற்றுள்ளார். அந்த சொத்து எங்கள் முன்னோர்களுடையது. அந்த சொத்தை தன்னுடைய சொத்தாக மோசடி செய்து விற்றுள்ளார். அதைத் தொடர்ந்து லால்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தீர்ப்பு 2017ல் எங்களுக்குச் சாதகமாக வந்தது. ஆனால், இறுதித் தீர்ப்பின் அறிக்கை இன்னும் வெளியிடப்படாமல் தாமதம் ஆவதால், இதுவரை சொத்து எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
மேலும், பொது சொத்தை விற்ற கிரயப் பத்திரத்தில் மிகத் தெளிவாக, மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால், தன்னுடைய சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துகளின் மூலமாக வில்லங்கத்தை ஈடு செய்வதாக உறுதி கூறி, அந்த நிலத்தை விற்பனை செய்து உள்ளார்.
எனவே, மோசடியாக பொது சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி, நிலத்தை மீட்டு முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களை வலியுறுத்த வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் மோசடி வழக்குத் தொடர குற்றப்பதிவு செய்ய வேண்டும்'' எனவும் மனுவில் கூறி இருந்தார்.