திருச்சி:மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பின்னத்தூர் பெரியகுளம். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளம் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மணப்பாறை பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் மிக முக்கியமான ஏழு குளங்களில் இதுவும் ஒன்று. இந்த குளத்தின் நீராதாரத்தை நம்பி 15க்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய தொழில் செய்து பயனடைந்து வருகின்றனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மழை பொய்த்து போனதால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றத்துடன் விவசாய தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் பெய்த கன மழையால் நிரம்பி வழிந்த நீர் நிலைகளில் இதுவும் ஒன்று.
இதனால் பல வருடங்களுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் தங்கள் விவசாய தொழிலை முன்னெடுத்து மிகவும் ஆர்வத்துடன் செய்யத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக நெல், கரும்பு உள்ளிட்டவைகளை அதிக அளவில் பயிரிட்டு பயனடைந்தனர். இந்நிலையில் தற்போது கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்த நிலையில், குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்ற தொடங்கியது.
இதனால் மழைக்காலங்களில் அந்த குளத்திற்கு நீர்வரத்து மூலம் மற்ற குளங்களில் இருந்து வந்த மீன்கள் இனப்பெருக்கத்திற்கு பின் பல மடங்காக பெருகியிருந்தது. தற்போது குளத்தில் இடுப்பளவு தண்ணீர் கிடந்த நிலையில், மீன்கள் தண்ணீருக்கு மேல் துள்ளி குதித்து விளையாட தொடங்கின.
இதனால் அப்பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் நாளை (சனிக்கிழமை) மீன்பிடி திருவிழா நடத்தி அதன் மூலம் பொதுமக்கள் மீன்களைப் பிடித்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக நேற்று இரவு சுமார் 10 மணியளவில் திடீரென குளத்திற்குச் சென்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வலைகளை போட்டு மீன்களை அரிக்க தொடங்கினர்.