திருச்சி: கடந்த 1919 முதல் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது திருச்சபையின் கீழ் 200 பள்ளிக்கூடங்கள், ஒரு கல்லூரி, 40 சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இதில் ஆயராக பணியாற்றுபவர்கள் 65 வயதில் பணி ஓய்வு வழங்கப்படும். அப்படி ஆயராக இருந்து ஓய்வுபெற்ற டானியல் ஜெபராஜ் மீது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பணத்தை வாங்கிக்கொண்டு நிரப்பியது தொடர்பான மற்றும் பல்வேறு ஊழல்களை விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக சர்ச் கமிட்டி செயலாளர் மெகர்ஆண்டனி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆயர் ஜெபராஜ் பணி ஓய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், அவர் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு பதவியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அதற்கு எதிராக நிர்வாக குழு நீதிமன்றம் சென்ற நிலையில், பதவி நீட்டிக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்து, மீண்டும் அதே நிர்வாகக்குழு செயல்பட அனுமதி அளித்தது.
இதனைத்தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது அவர் மீது ஆலயத்தின் இடங்களை குத்தகை மற்றும் விற்பது தொடர்பான ஊழல்கள் உள்ளது. மேலும் தரங்கை வாசத்தின் கீழ் செயல்படும் 35 பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணி இடங்களில் பணத்தை வாங்கிக்கொண்டு பணி வழங்கியது தொடர்பான ஊழல்கள் தெரியவருகிறது.