திருச்சி:துறையூர் - தம்மம்பட்டி சாலையில் 30 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. துறையூர் அடுத்த முருங்கபட்டி அருகே செட்டிக்காடு என்ற பகுதியில் சென்றபோது பேருந்தில் திடீரென தீப்பற்றி எறியத் தொடங்கியது.
இதனை அறிந்த ஒட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அவரது எச்சரிக்கையை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி வெளியேறினர். பேருந்து முழுவதும் மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.