திருச்சி: ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) ஒன்று பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டுச் செல்லப்படும் தொட்டில் குழந்தைகள் மற்றும் சாலையோரம் வீசப்படும் பிறந்த பச்சிளங் குழந்தைகள் போன்ற குழந்தைகள் இங்குக் கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த காப்பகத்தில் சுமார் 25 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முதல் அந்த காப்பகத்திலிருந்த கை குழந்தைகள் 8 பேருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உடல் நிலை சோர்வு அடைந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து காப்பக நிர்வாகிகள் உடனடியாக திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகளை அனுமதித்துள்ளனர். மேலும் 8 குழந்தைகளுக்கும் அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கைக்குழந்தைகள் என்பதால் குழந்தைகள் வார்டில் அவர்களுக்கான சிகிச்சை தீவிரமாக அளிக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், உடல் நிலை சோர்வு அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது சிகிச்சைக்கு வந்த பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் உடல் நிலையில், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு நலமாக இருப்பதாகவும் தற்போது மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.