திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும், விதமாக அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 30) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 'மலிண்டோ ஏர்' விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை மேற்கொண்டனர். அப்போது முகமது மொய்தீன் என்ற பயணி தனது உடைமைகளில், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்த 47 பாம்பு குட்டிகள், இரண்டு பல்லிகளை உயிருடன் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வனத் துறையினர் வன உயிரியல் பிரிவுக்கும் தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகள் மீண்டும் மலேசியாவிற்கே அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.