திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில், பயணிகள் போர்வையில் வியாபாரிகள் பலர் வெளிநாடு சென்று வருகின்றனர்.
இவ்வாறு வரும் வியாபாரிகள் தங்களது உடல், உடமைகளில் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு சுங்கத்துறை அலுவலர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(33) என்பவர் உடலில் மறைத்து 799 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சுங்கத்துறை அலுவலர்கள் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயம்: ‘தவறாக எடை போட்டிருக்கலாம்’- சிபிஐ அலுவலர்கள்!