திருச்சி: மணப்பாறை அடுத்து நல்லபொன்னம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவருக்கும் முள்ளிப்பாடியைச் சேர்ந்த அழகம்மாள் என்பவருக்கும் திருமணமாகி நான்கு வயதில் தங்கவேல் என்ற குழந்தையும், பிரேமலதா என்ற ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளன.
குழந்தை தங்கவேல் கடந்த வாரம் தனது அம்மாச்சி ஊரான முள்ளிப்பாடிக்குச் சென்றுள்ளது. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள வீட்டின் முன் குழந்தை நேற்று (செப். 8) மாலை நின்றுகொண்டிருந்தது.
அப்போது திருச்சி நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தையின் உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.