திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜன.13) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பாடிக் ஏர் விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 3 பயணிகள் அட்டை பெட்டியின் உள்பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். பின்னர், 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.