தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.பி. ஆனதில் திருப்தி இல்லை - திருநாவுக்கரசர் வருத்தம் - ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிதியுதவி

கரோனாவை காரணம் காட்டி, எம்.பி. நிதி முடக்கப்பட்டதால் எம்.பி. ஆனதில் திருப்தி இல்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.

ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிதியுதவி
நிதி உதவி

By

Published : Aug 4, 2021, 6:05 AM IST

திருச்சி:மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள காஜாமியான் மேல்நிலைப்பள்ளியில், 119 ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 1,500 நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மத்தில் சிறந்த தர்மம் கல்வியாளர்களை உருவாக்குவது

இந்நிகழ்ச்சியில் திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் 119 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ. 1,500 கல்வி உதவித் தொகையை வழங்கினார். அப்போது திருநாவுக்கரசர் பேசுகையில், "தர்மத்தில் தர்மம் சிறந்த தர்மம் கல்வியாளர்களை உருவாக்குவதுதான் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிதியுதவி

அன்னதான சத்திரங்கள் போன்றவற்றை கட்டுவதைவிட பெரிய புண்ணியம் கல்வியாளர்களை உருவாக்குவது என்றும் கூறினார்கள். கடந்த 40 ஆண்டு காலமாக கல்வியை மையமாக வைத்துதான் உதவிகளை செய்துவருகிறேன்.

பள்ளி இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

தமிழ்நாட்டில் தற்போது 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் பாதி காமராஜர் கொண்டு வந்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் காமராஜரோ பள்ளி இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறி ஊருக்கு ஊர் பள்ளிகளை கொண்டு வந்தார்.

மாணவ-மாணவிகளின் பசியை போக்க மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார். பின்னர் எம்ஜிஆர் அதை சத்துணவு திட்டமாக மாற்றி, தற்போது முட்டை, வாழைப்பழம் என்று இந்தத் திட்டம் வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

பணமிருப்பவர்கள் நல்லவர் அல்ல

இலவசங்களை கொடுக்கலாமா என வசதி படைத்தவர்கள் கேள்வி கேட்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் வசிக்கும் நாட்டில் இலவசங்கள் கொடுப்பதில் தவறில்லை. பள்ளி அளவில் மட்டுமின்றி, கல்லூரி அளவிலும் இலவசங்கள் வழங்கப்பட வேண்டும். காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 119 மாணவ மாணவிகளுக்கு தலா 1,500 ரூபாய் இங்கு வழங்கப்படுகிறது.

பணம் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் கிடையாது. பணத்தை ஏழை மக்களுக்கு கொடுக்கும் மனம் உள்ளவர்கள்தான் நல்ல மனிதர்கள். கடன் வாங்கி கூட உதவி செய்து சிலர் சந்தோஷம் அடைவார்கள். அத்தகைய மனசு அனைவருக்கும் அமையாது.

எம்.பி., ஆனதில் மகிழ்ச்சி இல்லை

ஆட்சியில் இருப்பவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். ஆட்சியில் இல்லாதவர்கள் இதுபோன்று உதவிகளை செய்து வருகின்றனர். நான் 45 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் இருந்துள்ளேன். ஆனால் இந்த முறை எம்.பி. ஆனதில் இரண்டு விஷயங்களில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

மக்கள் எனக்கு அதிக அளவில் வாக்களித்து நம்பிக்கையுடன் வெற்றிபெற செய்தார்கள். ஆனால் கரோனா தாக்குதல் காரணமாக மக்களை நேரடியாக சென்று சந்திக்க முடியவில்லை. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இது ஒரு பக்கம் கஷ்டம்.

மற்றொரு கஷ்டம் எம்.பி.,க்களுக்கான ஆண்டுக்கு ரூ. 5 கோடி நிதியை பிரதமர் மோடி கரோனாவை காரணம் காட்டி பறித்துக்கொண்டார். இந்த நிதி கிடைத்தால் சிறிய சாலைகள், பாலங்கள், ரேஷன் கடைகள் போன்றவற்றை கட்ட ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளாக மோடி இந்த நிதியை நிறுத்திவிட்டதால் பெரிய கஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

ஒருபுறம் கரோனா கஷ்டத்தை ஏற்படுத்தியது. மோடி ஒருபுறம் நிதியை நிறுத்தி கஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார். இதன் காரணமாக திருப்தி இல்லாத நிலையில் உள்ளேன்.

குழந்தைகளுக்கு பெற்றோர் பொறுப்பு

மாணவ, மாணவிகள் தற்போது கெட்டுப்போக பல வழிகள் உள்ளன. அவர்களுக்கு தொலைபேசிகளை வாங்கிக்கொடுக்காதீர்கள். ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டும் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதித்துவிட்டு, பின்னர் வாங்கிவிட வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பதில் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் பொறுப்பு உள்ளது. ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோரும் கற்றுக்கொடுத்த குழந்தைகள்தான் நல்ல நிலைமைக்கு வந்துள்ளார்கள்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர், காங்கிரஸ் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பு - அமைச்சர் சக்கரபாணி

ABOUT THE AUTHOR

...view details