தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வி.பி.எஃப். கட்டணம் : தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவதில் சிக்கல்

சென்னை : திரையரங்கில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்ப வசூலிக்கப்பட்டு வரும் வி.பி.எஃப் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகிய இரு தரப்பினர் இடையேயும் இழுபறி நீடித்துவருகிறது.

வி.பி.எஃப் பிரச்னை :  தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளிவர வாய்ப்பில்லையா ?
வி.பி.எஃப் பிரச்னை : தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளிவர வாய்ப்பில்லையா ?

By

Published : Nov 6, 2020, 3:01 PM IST

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற 10ஆம் தேதி முதல் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படுமென அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் வெளிவராத நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த சூழலில் அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திரையரங்கில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்ப வி.பி.எஃப் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்தனர். இந்த நிலையில், இனி திரையரங்க உரிமையாளர்கள்தான் இக்கட்டணத்தை செலுத்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்தது.

அதற்கு தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தற்போது தீபாவளியன்று திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் கடந்த இரண்டு நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதில் இறுதி முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "12 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பாளர்கள் வாரம்தோறும் கட்டி வரும் வி.பி.எஃப் என்கிற கட்டணத்தை இனி கொடுக்க முடியாது. டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்டணத்தை மட்டுமே கட்ட முடியம். திரையரங்கில் உள்ள ப்ரொஜக்டர் லீஸ் கட்டணத்தை திரையங்குகள் தான் கட்ட வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இணைந்து வைத்திருந்த ஐந்து கோரிக்கைகளில் ஒன்றைக்கூட திரையரங்கு உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாததால் அனைத்து தயாரிப்பாளர்களும் ஒன்றிணைந்து வி.பி.எஃப் கட்டணத்துக்கு முடிவு வரும் வரை தங்களது புதிய திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய திரையங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், "வி.பி.எஃப் கட்டணம் என்பது படம் வெளியாக டிஜிட்டல் நிறுவனங்களிடம் அவர்கள் கட்டுகிறார்கள். இதனை நாங்கள் கட்ட வேண்டும் என்கிறார்கள். எதற்காக கட்ட வேண்டுமென தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1,112 திரைகள் உள்ளன. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நாளொன்றுக்கு 20 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றால் சிறிய ஊர்களில் உள்ள சிறிய திரையரங்குகளில் நாள்தோறும் 2 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இவ்வளவு நட்டம் என கணக்கிட முடியாது. தீபாவளிக்குள் புதிய திரைப்படங்கள் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details