தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில்...!

நாமக்கல்: ராசிபுரம் உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாகும் !
நாமக்கல் வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாகும் !

By

Published : Nov 6, 2020, 3:26 PM IST

நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் குறித்த கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், "நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி வரை இப்பணிகள் நடைபெறும்.

இதன் தொடர்ச்சியாக சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகளும் தொடங்கப்படும்.

மாவட்டத்திலுள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் இந்தத் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும்.

சிறப்பு முகாம் நாள்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவம் வழங்குவார்கள்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1621 வாக்குச் சாவடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது சார்பில் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்ய பரிந்துரைக்கலாம்.

அதற்கான விவரங்களைத் தெரிவிக்க அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஏற்கெனவே கடிதம் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசியல் கட்சியினர் தங்களது வாக்குச்சாவடி முகவர்கள் விவரங்களைச் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி வாரியாக அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, துணை ஆட்சியர் பாத்திமா, கோட்டாட்சியர் கோட்டை குமார், அரசு அலுவலர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details