இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டு புலம் சார்பில் ஞானத்தமிழ் எனும் தலைப்பில் குறுகியகால படிப்பு நடப்பு கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் சான்றிதழ், பட்டயப் படிப்புகளும் தொடங்கப்படும். இந்தப் படிப்பிற்கான பாடத்திட்டங்களில் தமிழில் உள்ள அறிவு சார்ந்த இலக்கியங்களின் மூலம் வாழ்வியல் நெறிகளை சமுதாயத்திற்கு எடுத்துக் கூறும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் நடத்தப்படும்.
இந்தப் படிப்புகளில் உலகில் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் சேர்ந்து படித்து தங்கள் ஞானத்தை விரிவாக்கம் செய்து கொள்ள இயலும். தமிழில் பக்தி இலக்கியத்தின் வழி வெளிப்படும் தமிழ் மொழியின் வளமையை அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.