ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி, நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசால் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் இந்தப் பொது விநியோகத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறும்போது,
"இந்தத் திட்டத்தின்படி, அத்தியாவசியப் பொருள்களைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கான பொது விநியோகத் திட்ட பொருள்கள் கைவிரல் ரேகை அங்கீகரித்தல் மூலம் விநியோகிக்கப்படும்.
அவ்வாறு விநியோகம் செய்யப்படும்போது தமிழ்நாட்டில் வசிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் மின்னணு குடும்ப அட்டைக்கு இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையான பொது விநியோகத் திட்டத்தில் அரிசி 1 கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை 1 கிலோ 2 ரூபாய்க்கும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம் மற்றும் வார்டினைத் தவிர பிற நியாயவிலைக் கடைகளில் தங்களுக்கான பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருள்களைப் பெற தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமித்து நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற ஏதுவாக உரிய படிவத்தில் அந்நபர்களுக்கான அங்கீகாரச்சான்று விவரங்களைப் பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் அளிக்க வேண்டும்.