மதுரை: பள்ளியில் சேரும் 6ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் விலையில்லா கைபேசிகளை அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்று வழங்கி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வசந்த் நகர் அருகேயுள்ளது தியாகராசர் மேல்நிலைப்பள்ளி. மிகப் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியை நிர்வகிப்பது தனியார் நிர்வாகமென்றாலும், அரசின் உதவிகளைப் பெற்று கல்விச் சேவையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது.
இந்நிலையில், கரோனா நோய்க் கிருமி பரவலைத் தடுக்க மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டே உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் பள்ளி, கல்லூரிகள் தற்போது இணையம் மூலமாக வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளன.
அதுமட்டுமன்றி, தற்போது மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ள நிலையில், மாணவர்களை ஈர்க்க பல்வேறு வகையிலும் யுக்திகளைக் கையாண்டு வருகின்றன.
அந்த வகையில், தங்களது பள்ளியில் 6ஆம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக விலையில்லா கைபேசிகள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியுள்ளது, மதுரை தியாகராசர் மேல்நிலைப்பள்ளி.
மதுரை மாநகரையே பெரும் ஆச்சரியத்திற்குள் தள்ளியிருக்கும் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமநாதன் மற்றும் மூத்த ஆசிரியை கிருஷ்ணவேணியைத் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டபோது, "மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்களின் மறைமுக இலக்கு.
6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா கைபேசி தற்போதைய இணைய வழிக்கல்வி காலத்தில் கைபேசிகள், இல்லாத ஏழை மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களது கற்றல் திறனும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
எங்கள் பள்ளியில் சேரும் மாணவ, மாணவியரிடம் எந்தவித கட்டணமும் நாங்கள் பெறுவதில்லை. முழுவதும் இலவசமான கல்வி. பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது சொந்தப் பணத்தை பகிர்ந்து மாணவர்களுக்கு இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.