தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ளது ஒகேனக்கல். அங்குள்ள போடரஅள்ளி, கேரட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாற்றம்பாளையம், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, பண்ணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பருவத்தில் கர்நாடக காட்டு யானைகள் சுற்றித் திரிவது வழக்கம்.
ஒகேனக்கலில் சுற்றித்திரியும் கர்நாடக காட்டு யானைகள் - பீதியில் பொதுமக்கள்
தருமபுரி : ஒகேனக்கல் பிலிகுண்டுலு காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் கர்நாடக காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உணவு தேடி பிலிகுண்டுலு பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்ததாக அறிய முடிகிறது. இந்நிலையில், தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யானைகள் கர்நாடக காட்டுப்பகுதிக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தமிழ்நாடு காட்டுப் பகுதிகளிலேயே சுற்றித் திரிய வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் செல்லும் போது யானைகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை கர்நாடக காட்டுப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.