தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆசிரியர் நியமனத்தில் எம்.பி.சி பிரிவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அரசு போக்க வேண்டும்' - ராமதாஸ் - எம்.பி.சி இட ஒதுக்கீடு

சென்னை: ஆசிரியர்கள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் நியமனத்தில் எம்.பி.சி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அரசு போக்க வேண்டும் - மரு. ராமதாஸ்
ஆசிரியர் நியமனத்தில் எம்.பி.சி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அரசு போக்க வேண்டும் - மரு. ராமதாஸ்

By

Published : Aug 6, 2020, 2:46 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேர் ஆசிரியராகும் வாய்ப்பை இழந்துவிட்டனர். அவர்களில் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேதியியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாக பின்பற்றி புதிய பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

அதை எதிர்த்து ஆசிரியர் வாரியம் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்களால் இப்படி ஒரு சமூக நீதி படுகொலை நடத்தப்படுவதை, சமூகநீதிக்கு ஆதரவான அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.

பின்னடைவு பணியிடங்களையும், நடப்பு காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்பு காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவு பணியிடங்களையும், தொடர்ந்து நடப்பு காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும்.

பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை உறுதி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.சி மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில் தர வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்.பி.சி. மாணவர்களை நியமிக்க ஆணையிட்டுள்ளது. அது தான் சரியான தீர்ப்பாகும்; சமூகநீதியும் ஆகும்.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து மறுத்து வருகிறது. சமூக நீதியின் புதிய பாதுகாவலராக அவதாரம் எடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்த சமூக அநீதியை கண்டும் காணாமல் 7 மாதங்களாக வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதாலா? எம்.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் அமைதி காப்பது தான் புதிய சமூக நீதியா?

வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற்று, சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி புதிய பட்டியல் தயாரித்து பணி ஆணை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஆணையிட வேண்டும்.

தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details