தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரேற்று பாசன திட்டத்தை ஏற்படுத்தி தரக் கோரி தருமபுரி விவசாயிகள் உண்ணாவிரதம்! - Dharmapuri farmers on hunger strike demanding quality irrigation project

தருமபுரி : கே.ஈச்சம்பாடி அணையிலிருந்து உபரி நீரை ஏரிகளில் நிரப்பி நீரேற்று பாசனத்திற்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பாசனத்திற்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரி தருமபுரி விவசாயிகள் உண்ணாவிரதம்!
பாசனத்திற்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரி தருமபுரி விவசாயிகள் உண்ணாவிரதம்!

By

Published : Oct 19, 2020, 7:33 PM IST

Updated : Oct 19, 2020, 7:46 PM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீர் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையைச் சென்றடைவது வழக்கம்.

அவ்வாறாகச் செல்லும் உபரி நீரை தருமபுரியைச் சுற்றியுள்ள மொரப்பூர், கடத்தூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள வறண்ட ஏரிகளிலும், குளங்களிலும் நீரேற்று திட்டம் மூலம் நிரப்பி, பாசன வசதியை மேம்படுத்தி தரக்கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இதனிடையே, அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 310 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இதுவரை அதற்கான பணிகள் எதையும் அரசு தொடங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பேசிய அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர், "நீரேற்று திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசுக்கு தருமபுரி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற அரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் கூட இந்தத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவோம் என அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை அதற்கான எந்தவொரு பணியையும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தத் திட்டத்தை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலை முற்றுமுழுதாக புறக்கணிப்போம்" என எச்சரித்தனர்.

இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Last Updated : Oct 19, 2020, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details