சென்னை ஆர்.ஏ. புரம் பகுதியில் வசித்துவருபவர் சிறுமி மாலதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 11ஆம் வகுப்பு படித்து வருகின்ற அம்மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி அவரது பெற்றோரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 16ஆம் தேதி அன்று அவரது பெற்றோர் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரித்து பதிவிட்ட நபரின் ஐடியை வைத்து தேடிவந்துள்ளனர்.
அந்தத் தொழில்நுட்ப ரீதியிலான தேடலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன்தான் அந்தப் படத்தைப் பதிவேற்றியது கண்டறியப்பட்டது.
11ஆம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிட்ட அந்தக் கல்லூரி மாணவனை கைதுசெய்த சென்னை காவல் துறையினர் அவரிடம் இது தொடர்பாக மேலதிக விசாரணை செய்துவருகின்றனர்.