கலைஞர் தமிழ்ப் பேரவை மாநிலச் செயலாளர் பி. ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனுக்கு எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் மெட்ரோ என்றும், சிஎம்பிடி மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெட்ரோ ஸ்டேஷன் என்றும் பெயர்களை முதலமைச்சர் பழனிசாமி சூட்டியுள்ளார்.
ஆனால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டத்தை முதன்முதலாக வடிவமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இதற்காக ஜப்பான் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு உள்ளது போன்ற மெட்ரோ திட்டத்தை சென்னையிலும் கட்டமைக்க திமுக ஆட்சிக்காலத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மெட்ரோ திட்டத்துக்கு முக்கியக் காரணமான கருணாநிதியின் முயற்சியை திட்டமிட்டு மறைக்கவும், அரசியல் காரணங்களுக்காகவும் மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு 3 முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களைத் தமிழ்நாடு அரசு சூட்டியுள்ளது.
அந்த வரிசையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ‘கலைஞர் கருணாநிதி டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷன்’ எனப் பெயர் சூட்ட உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று, இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்ட பரிசீலிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.