தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைத்து செம்மொழியை அவமதிக்கக் கூடாது'

சென்னை: தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைத்து செம்மொழியான தமிழை அவமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

" தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைத்து செம்மொழியை அவமதிக்கக் கூடாது" - ராமதாஸ்
" தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைத்து செம்மொழியை அவமதிக்கக் கூடாது" - ராமதாஸ்

By

Published : Aug 5, 2020, 3:08 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவணத்தில் அனைத்து செம்மொழி ஆராய்ச்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும்; அதே நேரத்தில், பல்கலைக்கழகத்திற்குள் அவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணம் மிகவும் வினோதமானது. செம்மொழி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பல்புல ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் கூறப்படும் இந்தக் காரணம் நம்பும்படியாக இல்லை; இதை ஏற்றுக்கொள்ள முடியாது. செம்மொழி தமிழாய்வுக்காக இருக்கும் மத்திய நிறுவனத்தை மூட வேண்டும் புதிய கல்விக் கொள்கையில் கூறியிருக்கும் மத்திய அரசு, அதே ஆவணத்தில் பிற பல்கலைக்கழகங்களில் செம்மொழி நிறுவனத்திற்கு இணையான சமஸ்கிருத மொழித் துறையை அதிக எண்ணிக்கையில் தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் 3 சமஸ்கிருத நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. இப்போது மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்திற்காக தனித்துறைகளை உருவாக்குகிறது. ஆனால், தமிழுக்கு மட்டும் இருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைத்து விட்டு, தனித்த ஆராய்ச்சிக்கு மூடுவிழா நடத்த வேண்டுமாம்.

மொழிக்கு ஒரு நீதி என்பது எவ்வகையில் நியாயம்? உலக அளவில் செம்மொழி தகுதி பெற்றவை தமிழ் உள்ளிட்ட 7 மொழிகள் தான். அவற்றில் லத்தீன் மொழி அழிந்து விட்ட நிலையில், மீதமுள்ளவற்றில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும் தான். எனவே தமிழை பெருமைப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டும் தான் அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழாய்வு மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைத்து செம்மொழியை அவமதிக்கக் கூடாது.

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு, இப்போதுள்ள இயக்குநருக்கு பதிலாக, தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவரை புதிய இயக்குநராக நியமித்து, தமிழாராய்ச்சியை மேம்படுத்த வேண்டும்; செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தமிழாராய்ச்சிப் பணிகளை படிப்படியாக விரைவுப்படுத்தி, அதை விரைவில் செம்மொழி தமிழாய்வு மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார் .

ABOUT THE AUTHOR

...view details