தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ.டபிள்யூ.எஸ். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நீதிமன்றம்!

சென்னை: பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியில் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே இ.டபிள்யூ.எஸ். இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 இ.டபிள்யூ.எஸ் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நீதிமன்றம் !
இ.டபிள்யூ.எஸ் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நீதிமன்றம் !

By

Published : Nov 21, 2020, 6:40 PM IST

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் சலுகையைப் பெற ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், இ.டபிள்யூ.எஸ். உள் இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ மேற்படிப்பில் சேர ஏதுவாக, பொருளாதார ரீதியான பின்தங்கியவர் எனச் சான்றிதழ் வழங்கக்கோரி சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பூர்வி, எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாகக் கூறி அவரது விண்ணப்பத்தை எழும்பூர் வட்டாட்சியர் நிராகரிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ரத்துசெய்து, தனக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி மருத்துவர் பூர்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "இ.டபிள்யூ.எஸ். உள் இட ஒதுக்கீட்டைப் பெற 2019ஆம் ஆண்டு வருமான சான்றிதழைப் பெற்றேன். அப்போது எனது தாயார் எதிர்பாராத வகையில் திடீரென மரணமடைந்தார்.

இதன் காரணமாக என்னால் மேற்படிப்பில் சேர முடியவில்லை. கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஓராண்டுக்கு மருத்துவராகப் பணியாற்றினேன்.

தாய் மரணத்துக்குப் பின், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தை தற்போது வேலைக்குச் செல்வதில்லை. எனக்கு நடப்பாண்டு ஆறு லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய் மட்டுமே வருமானமாக வந்துள்ளது. அதற்குரிய ஆவணங்களுடன் வருமான வரிக் கணக்கையும் நான் தாக்கல் செய்துள்ளேன்.

எனவே, எழும்பூர் வட்டாட்சியர் உத்தரவை ரத்துசெய்து எனக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், உயர் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது தற்போது தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இது சமுதாயத்தில் பல்வேறு பிரிவினரிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

தகுதியான மாணவர்கள், கல்வியில் வாய்ப்பைப் பெற முடியாத நிலையும், தகுதி இல்லாத மாணவர்கள் இட ஒதுக்கீடு மூலம் அந்த வாய்ப்பை பெறும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேல்மட்டத்தில் உள்ளோர் மட்டும் உயர் கல்வியில் வாய்ப்பைப் பெறும் நிலை பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே, இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

மனுதாரரின் ஆவணங்களில் இருந்து அவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவருக்கான சான்று பெறத் தகுதி உள்ளது.

வருமான வரி சான்று கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை நிராகரித்த எழும்பூர் வட்டாட்சியரின் உத்தரவை ரத்துசெய்கிறோம். புதிதாக சான்று வழங்க வட்டாட்சியருக்கு அறிவுறுத்துவதாக உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details