கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரங்கங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை ஏழு மாதங்களான மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அவ்வவ்போது அமல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, அருங்காட்சியகங்கள் நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்படலாம் என, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்று (நவ.10) பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குநர் நந்தாராவ் கூறுகையில், தமிழ்நாடு அரசு விதித்த அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 நபர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என்ற விதிமுறையை நாங்களே வகுத்துக் கொண்டு, அதனடிப்படையில் பார்வையாளர்களை அனுமதித்து வருகிறோம் என்றார்.
இதேபோன்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகமும் இன்று(நவ.10) திறக்கப்பட்டது. இதுகுறித்து அதன் காப்பாட்சியர் முனைவர் மருது பாண்டியன் கூறுகையில், தமிழ்நாடு அரசின் 626 ஆவது அரசாணையின்படி, இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அருங்காட்சியங்கள் திறக்கப்படுகின்றன. கிருமிநாசினி, முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்டவையை உறுதியாகக் கடைபிடித்து, அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் பார்வையாளர்களிடமிருந்து கட்டணமாகப் பணத்தை நேரடியாக பெறாமல், 'கியூ ஆர் ஸ்கேனர்' மூலமாக கட்டணம் பெறப்படுகிறது. நாளொன்றுக்கு இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு காட்சிக்கூடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படுகின்றன. பார்வையாளர்கள் நலன் கருதி, மேற்குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு பொது மக்கள், பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.