சென்னை கரோனா பாதிப்பு எண்ணிக்கை கரோனா, சமூகத்தில் எந்த அளவு கலந்துள்ளது என்பதைக் கண்டறிய மக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு நடத்தியது.
இந்தியாவின் 21 மாநிலங்களில் அதிக பாதிப்பு உள்ள 69 மாவட்டங்களில் இந்த சீரோ-சர்வே ( sero-survey ) ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு முன்களப்பணியாளர்களை கொண்டு ‘எலிசா’ பரிசோதனை முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் முதற்கட்ட ஆய்வு முடிந்து, அதன் முடிவுகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, "சென்னையில் மொத்தம் 12 ஆயிரத்து 405 எலிசா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னையில் 21.5 விழுக்காடு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தண்டயார்பேட்டையில் 44.2 விழுக்காட்டினருக்கும், ராயபுரத்தில் 34.4 விழுக்காட்டினருக்கும், அண்ணா நகரில் 25.2 விழுக்காட்டினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மாதவரத்தில் 7.1 விழுக்காட்டினருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.
சென்னையில் இன்னும் 80 விழுக்காட்டினர் மக்கள் கரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.